Thursday, March 10, 2005

தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமளி! சாலை மறியல்!

இதுவே இவர்களுக்கு வாடிக்கையாகி விட்டது. உருப்படியான
விஷயங்களை விவாதிப்பதற்காக, நம் சட்டப் பேரவை உறுப்பினர்கள் நேரம் செலவிடுவது மிகவும் குறைவு என்பது மக்கள் அறிந்த ஒன்றே! இவர்களது கேலிக்கூத்தை சட்டசபைக்கு வெளியிலும் அரங்கேற்ற வேண்டுமா என்பது தான் கேள்வியே! இவர்கள் நேற்று முன் தினம் செய்த சாலை மறியலும், ஊர்வலமும் பொது மக்களுக்கு எவ்வளவு பாதிப்பையும், கஷ்டத்தையும், எரிச்சலையும் தருகின்றன என்று யாராவது இவர்களுக்கு எடுத்துக் கூறினால் பரவாயில்லை. இந்த ஒரு விஷயத்தில் எல்லா கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதில் சந்தேகமில்லை!

உறுப்பினர்கள் அடிக்கும் கூத்தினால், போக்குவரத்து ஸ்தம்பித்து விடுகிறது.
சீரியஸ்னஸ் இல்லாமல் பல சட்டப் பேரவை உறுப்பினர்கள் வம்பு பேசிக்கொண்டும், ஜோக் அடித்துக் கொண்டும் சாலையில் கும்பலாக அமர்ந்து பொதுமக்களை வெறுப்பேற்றுவது மிகவும் கொடுமை. அதையும், நமது பத்திரிகையாளர்கள் சுறுசுறுப்பாக பதிவு செய்வது மற்றொரு கொடுமை! இவர்களுக்குத் தான் வேறு வேலையில்லை என்றால், பொதுமக்களுக்கும் அப்படியா என்ன?

பலரது முக்கிய அலுவல்கள் பாதிக்கப்படுகின்றன / தாமதப்படுகின்றன. ஏன் இப்படி செய்கிறீர்கள் என்றால், உடனே ஜனநாயக உரிமை பற்றி வியாக்கியானம் செய்வார்கள்! உங்கள் உரிமையை நிலைநாட்ட பொது மக்களை ஏன் இம்சை செய்கிறீர்கள்? வழக்கு தொடுங்கள், ஜனாதிபதியிடம் செல்லுங்கள், பிரதமரிடம் சொல்லுங்கள், உருப்படியாக ஏதாவது சட்டம் கொண்டு வரப் பாருங்கள்! அதை விட்டு விட்டு, சும்மா பொது மக்கள் உயிரை வாங்கிக் கொண்டு இருப்பது நியாயமில்லை! பந்த்-ஐ தடை செய்ய வேண்டும் என்று பேசுபவர்கள், இவ்வகை தடாலடி மறியல்களை ஒழிக்க வேண்டியதைப் பற்றியும் யோசிக்க வேண்டும்.

0 மறுமொழிகள்:

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails